
புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்பட்டது.சரியாக காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலைப் பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
- இந்தியாவை இந்த உலகமே ஓர் ஒளிரும் நட்சத்திரமாகப் பார்க்கிறது. உலகமே கடுமையான சூழலை சந்தித்துள்ள வேளையில் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது.
- உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.
- பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
- இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், தொழில் துறையினருக்கு உகந்ததாக இருக்கும்.
- இந்தியப் பொருளாதார வளர்ச்சியை 7 இன்ஜின்களை செலுத்தி உறுதி செய்யவிருக்கிறோம். அவை: சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொதுப் போக்குவரத்து, நீர்நிலைகள், கட்டுமானம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 7 இன்ஜின்களை இணைத்து செயல்படுத்தி இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வோம். இதற்கு எரிசக்தி பகிர்மானம், தகவல்கள் தொழில்நுட்பம், சமூக கட்டமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு துறைகள் துணையாக இருக்கும்.
முன்னதாக, இன்று காலை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்தப் பேட்டியில், "மத்தியில் மோடி தலைமையில் அரசு அமைந்ததில் இருந்தே ஒவ்வொரு பட்ஜெட்டும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. வரிச் சலுகைகளைப் பொறுத்தவரையில் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் பட்ஜெட் எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment